கட்டுரை

தமிழின வழிகாட்டி!

பொள்ளாச்சி மா. உமாபதி

அரை நூற்றாண்டு காலம் ஒருவரே ஒரு கட்சியின் தலைவராக இருக்கிறார். இவரை விட்டால்  உங்களுக்கு வேறு எவரும் இல்லையா? என்று கேட்கிறார்கள்.  வேறு எவருக்கும் கிட்டாத பேறு , வேறு எவருக்கும் கிடைக்காத வரம் தலைவர் கலைஞர். ஐம்பது ஆண்டுகளை அவர் உண்டு,உறங்கி கண்டு, களித்து, உடுத்தி மகிழ்ந்து நாள்களை நகர்த்தியவரல்ல கலைஞர். காலமெல்லாம் போராடிக் கழகத்தை வளர்த்தவர். கழகத்தின் வழியாக தமிழையும் தமிழகத்தையும்  வளர்த்தவர்.

தந்தை பெரியாரிடம் இருந்து பிரிந்து வந்து ஒரு அரசியல்கட்சியை தொடங்கி பதினெட்டே ஆண்டுகளில் மாநில ஆட்சியைக் கைப்பற்றி சாதனை படைத்தவர் அண்ணா. அதனை அறிஞர் அண்ணா சாதித்தார்.  1949 முதல் 1967 வரை காங்கிரஸ் எதிர்ப்பு என்ற திசையில் மட்டுமே சென்று கொண்டிருந்தது  திமுக.  மாநிலத்தைத் தாண்டி அகில இந்திய அரசியலில் பெரும் பங்கினையோ பார்வையையோ  அதுவரை செலுத்தவில்லை.

ஆனால் 1969இல் அண்ணா அவர்களின் மறைவுக்குப் பிறகு கலைஞர் திமுகழகத்தின் தலைவரான பிறகு ,  அகில இந்தியாவையும் திமுக பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தார். 1969 இந்திய குடியரசுத் தலைவர் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் சஞ்சீவ ரெட்டியை தோற்கடிக்க பிரதமர் இந்திராகாந்தி அம்மையார் விவிகிரி அவர்களை நிறுத்தியபோது விவி கிரி அவர்களை ஆதரித்து வெற்றி பெற வைத்தவர் கலைஞர். அன்றைக்கு கலைஞர் இந்திராகாந்தி அம்மையாருக்கு ஆதரவு தரவில்லை என்றால் இந்திய அரசியல்வரலாறு  வேறு பாதையில் திரும்பிச் சென்றிருக்கும்.

மன்னர் மானியத்தை நிறுத்துவது, வங்கிகளை தேசியமயமாக்குதல் ஆகிய திட்டங்களில் இந்திராகாந்தி அவர்களுக்கு துணை நின்றவர் தலைவர் கலைஞர். இதற்கான நாடாளுமன்ற வாக்கெடுப்பில் ஒரு ஒட்டு வித்தியாசத்தில் இந்திராகாந்தி தோல்வியை தழுவி தேர்தலை சந்தித்த போது 1971 ஆம் ஆண்டு தேர்தலில் இந்திரா அம்மையாருடன் கை கோர்த்தவர் கலைஞர். தமிழ்நாட்டில் பெருமளவுக்கு ஆதரவில்லாத இந்திரா காங்கிரசுக்கு 10 நாடாளுமன்றத் தொகுதிகளை ஒதுக்கி, திமுக 25 இடங்களில் போட்டியிட்டு வென்று அவரது முற்போக்குத் திட்டங்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டியவர் கலைஞர்.

அதேபோல் எமெர்ஜென்சியின் போது,  Revoke Emergency! Restore Democracy!! Release the Leaders!!!    என்று இந்தியாவிலேயே எமர்ஜென்சியை எதிர்த்து தீர்மானம் போடுகிற வல்லமை மிகுந்தவராக கலைஞர் திகழ்ந்தார். அப்போது செய்தி தணிக்கை நடைமுறையில் இருந்தபோது. ‘வெண்டைக்காய் உடலுக்கு நல்லது‘  ‘விளக்கெண்ணெய் சூட்டைத் தணிக்கும் ‘ என்று நையாண்டி செய்திகளை எட்டுக்கால தலைப்புச் செய்திகளாக வெளியிட்ட துணிச்சல் மிகுந்த போராளியாகவும் திகழ்ந்தார். விவிகிரி அவர்களை குடியரசுத் தலைவராக்கத் துணை நின்றது மட்டுமல்ல,முதல்  பிற்படுத்தப் பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த  கியானி ஜெயில் சிங் அவர்களையும்  தாழ்த்தப் பட்ட சமுதாயத்தைச் சார்ந்த  கே ஆர் நாராயணன் அவர்களையும், முதல் பெண் குடியரசுத் தலைவராக பிரதீபா பாட்டீல் அவர்களையும்  குடியரசுத் தலைவர்களாக தேர்வு செய்ய காரணமாக இருந்தவர் கலைஞர்.

 சமூக நீதிக் காவலர் விபி சிங் அவர்களையும், தேவகவுடா அவர்களையும், ஐ.கே. குஜ்ரால் அவர்களையும் பிரதமர்களாக தேர்வு செய்ய பெரும் காரணமாக இருந்தவர் கலைஞர்.  இந்தியாவில் வேறு எந்த மாநிலத்தையும் விட தமிழகத்தை பல துறைகளிலும் முன்னேறிய மாநிலமாக்கியது அவரது தலைமையே. 

ஆக, கலைஞர் தன் வாழ்நாளில் அரை நூற்றாண்டை கட்சிக்கு தலைமை தாங்கி தமிழகத்துக்கு ஒளி காட்டியவர். தமிழினத்துக்கு வழிகாட்டியவர். தமிழை செம்மொழியாக்கி தமிழுக்கு ஒளி கூட்டியவர். தமிழ் நாடு, மொழி, இனம் மூன்றுக்கும் உயர்வு தந்த ஒப்பற்ற மாமனிதர்.

( உமாபதி, திமுகவின் கலை இலக்கிய பகுத்தறிவுப் பேரவையின் மாநிலச் செயலாளர்)

ஆகஸ்ட், 2018.